பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் உயர்நிலைக் குழு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது.
அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு உறுப்பினர் மைக்கேல் மெக்கால் தலைமையிலான 6 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்தக் குழு, இந்தியாவின் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியது. திபெத் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை அமெரிக்க குழுவினர் தலாய் லாமாவிடம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து நான்சி பெலோசி தலைமையிலான அமெரிக்க உயர்நிலைக் குழு பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தது. அப்போது திபெத் விவகாரம், தைவான் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.