முதுநிலை நீட் தேர்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-
யுஜிசி நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருப்பது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணி களாக அமைந்துள்ளன.
முறைகேடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வு முறையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதை ஆக்க வேண்டும். தொழில் முறை படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட கைகள் கோப்போம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.