கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த விஷ சாராயத்தை வாங்கி குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் முதலில் உயிரிழந்தனர். விஷ சாராயத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பது அப்போது தெரியவில்லை. இதனால் அவர்களின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களும் விஷ சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகும். இந்த விவகாரத்தில் சுமார் 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.. மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்ததால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 58க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த கொடூரம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வருவாய் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னையில் பாரிமுனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக சார்பில் பாரிமுனையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், அதை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 500 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கள்ளக்குறிச்சியில் 58 பேரின் உயிரைக் காவு வாங்கிய விஷச் சாராய சம்பவத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார். விஷ சாராய மரணங்கள் அதிர்ச்சி தருகிறது என்றும் இந்த விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் சாடினார். மேலும் அவர், “சட்டசபையில் விஷ சாராயம் குறித்துப் பேச முற்பட்ட போது அதற்கு அனுமதி தரப்படவில்லை.. கேட்டால் சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை மட்டும் பேசுங்கள் என்கிறார்கள். இது முக்கியமான பிரச்சனை இல்லை என்றால் வேறு எது தான் முக்கியமான பிரச்சினை” என்று கடுமையாகச் சாடினார்.