நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மத்திய அரசு மெய்ப்பித்துள்ளது: மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மத்திய அரசு மெய்ப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியான நிலையில், அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டார். நீட் மோசடிகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வும் ரத்தாகியுள்ளது.

இந்த சூழலில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், நீட் விலக்கு வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் குழப்பங்கள் அரங்கேறி வருகிறது .நீட் தேர்வு மோசடியானது என தொடக்கத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருந்ததை இன்று வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் உணர ஆரம்பித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண் பெற்றவர்கள் 2 பேர், 2022 ஆம் ஆண்டு யாருமே முழுமையான மதிப்பெண் பெறவில்லை என்றும், 2023 ஆம் ஆண்டு 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றும் சுட்டிய மா.சுப்பிரமணியன், “இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர், இதில் குழப்பத்திற்கான முக்கிய காரணம், 720க்கு 720 முழு மதிப்பெண்ணாக 67 பேர் பெற்றதும், அதன் தொடர்ச்சியாக 719, 718 போன்ற மதிப்பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது தான்” என்றார்.

23 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் குறிப்பிட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் கொடுத்தது ஏன் என்றும், இந்த கருணை மதிப்பெண் யார் யாருக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்றும் கேள்விகளை எழுப்பிய அவர், இந்த கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகமையிடம் பதில் இல்லை என்றார்.

தொடர்ந்து, “முதலில் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்த நிலையில், தற்போது தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக் கொண்டுள்ளார். தேசிய தேர்வு முகமை தலைவரை திடீரென்று நீக்கி நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மத்திய அரசு மெய்ப்பித்துள்ளது. அத்துடன், நீட் முதுநிலை தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.

சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் மத்திய அரசின் போக்கு உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது என்றும், இதனை கண்டுகொள்ளாத மத்திய அரசின் மெத்தனப் போக்கால் இன்னும் எத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெறும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது என்றும் மா.சுப்பிரமணியன் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.