ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி!

டெல்லிக்கு தண்ணீர் வேண்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தண்ணீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர். வெப்ப அலை வீசுவதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அலைமோதி வருகின்றனர். ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தண்ணீர் விடாததாலேயே டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்றனர் டெல்லி மக்கள்.

இந்நிலையில் யமுனை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அளவை குறைக்கும் ஹரியானா அரசை கண்டித்து டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி ஜூன் 21ஆம் தேதி (வெள்ளி) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் தனது உடல் எவ்வளவு பலவீனமடைந்தாலும் ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடர்வேன் என்று கூறினார்.

இன்று உண்ணாவிரதப் போராட்டம் 5ஆவது நாளை எட்டிய நிலையில் அதிஷி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாலை டெல்லியில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.