கள்ளக்குறிச்சிக்கு மத்திய அரசின் ஆய்வுக் குழுவினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் ஏராளமானோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா தலைமையில் தேமுதிகவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிறகு போராட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் அதிகமான பெண்கள் விதவைகளாக இருப்பதற்கு காரணம் திமுக அரசு தான். கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என்பது தேமுதிகவின் கோரிக்கை. தமிழகத்தில் டாஸ்மாக் கடையும் உண்டு, கஞ்சாவும் உண்டு, கள்ளச் சாராயமும் உண்டு. கல்வராயன் மலையில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்கப்படுவது தான் திமுக அரசின் சாதனை.
திமுக அமைச்சர் முத்துசாமி கள்ளச் சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 10 லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கோ அல்லது கூலி தொழிலாளிகளுக்கோ கொடுத்தார்களா?. மக்கள் வரிப் பணத்தில் இருந்து 10 லட்சம் கொடுக்கிறார்கள், உயிரிழந்தவர்கள் என்ன நாட்டுக்காக உயிரிழந்தவர்களா? அவர்களுக்காக எதற்குத் தர வேண்டும்.
வெகு விரைவில் திமுக அரசு விரட்டி அடிக்கப்படும். அதற்கான துவக்கம்தான் கள்ளக்குறிச்சி விவகாரம். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் தீர்வு காண வலியுறுத்தி தேமுதிக சார்பில் ஆளுநரிடம் மனு அளிக்கப்படும். மத்திய அரசிடம் ஆய்வுக் குழு நேரில் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.