அரசியலமைப்பு குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை: அண்ணாமலை

அரசியல் சாசனம் குறித்து பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை என்று அண்ணாமலை கூறினார்.

நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்கம் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை பிரகடனம் குறித்த கருப்பு தின நினைவுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

நாட்டில் 1975 ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமலானது. எமர்ஜென்சியின் போது 21.14 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அடக்குமுறைகளுக்கு மக்கள் உள்ளாகினர். இந்த வரலாற்றை இளைஞர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நம்நாட்டில் ஜனாதிபதி முறை வேண்டும் என்று நினைத்தார். அதற்கான சாத்தியங்களை ஆராயும் தகவல் வெளியானதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதனுடன், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பிரதமர், பேரவைத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றம் உட்பட யாரும் கேள்வி கேட்கக்கூடாது எனசட்டத்தில் திருத்தம் கொண்டுவந் தார். இதற்கு அப்போது 17 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்றத்தை கூட்டி ஆதரவு தெரிவித்தனர்.

அதேபோல், அரசியலமைப்பு சட்டத்தில் அதிகளவில் திருத்தங்கள் செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியலமைப்பில் 8 முறை மட்டுமே மாற்றங்கள் செய்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்திரா காந்தி 356 சட்ட விதியைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆட்சிகளை கலைத்துள்ளார். 1969-ம் ஆண்டு ஒரே நாளில் 14 தனியார் வங்கிகளை ஒரே இரவில் தேசியமயமாக்கினார். அதன்பின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. 1971-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரே நாடு ஒரே தேர்தல்முறை இருந்தது. அதன்பின்னர், இந்த தேர்தல் முறையை மாற்றினர்.

அதேநேரம் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய தலைவர்கள் அரசியல் சாசனத்தை வைத்துக்கொண்டு தற்போது போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், அரசியல் சாசனம் குறித்து பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை. இந்த முறை 21 கட்சிகளை இணைத்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 230 இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக இத்தேர்தலில் தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.