அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்: பிரேமலதா நேரில் ஆதரவு!

அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து சென்னை எழும்பூரில் இன்று (வியாழக்கிழமை) நடந்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்திய 63 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுவிலக்கு அமல் பிரிவு டிஜிபி மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என அதிமுகவினர் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்டு பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இத்தொடர் முழுவதும் பேரவையில் பங்கேற்காத வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மைக் மற்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், அனைவரும் அறவழியில் அமைதியாக உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இங்கு அதிமுக எம்எல்ஏக்கள் தனியாகவும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தனியாகவும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிர போராட்டத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சிபிஐ விசாரணை நடத்தினால் திமுகவின் முகத்திரை கிழியும் என்பதால் அதற்கு மறுக்கின்றனர். எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்க நினைத்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். 2026-ல் நிச்சயம் ஆட்சி மாறும். அதிமுக-தேமுதிக கூட்டணியில் நல்லாட்சி மலரும்” என்றார்

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியும் நேரில் சந்தித்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ் பி வேலுமணி, பி.தங்கமணி, சி.பொன்னையன், தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர்.