பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரம்: வழக்கை வாபஸ் கோருவது நியாயமற்றது: உயர்நீதிமன்றம்!

தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்குள் கொண்டுவந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறக்கோருவது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்ததாக தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக உரிமைக்குழு இருமுறை அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை உயர் நீதிமன்றம் தொடர்ச்சியாக ரத்து செய்தது. இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரவைச் செயலர் தரப்பில் தொடரப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், முந்தைய ஆட்சியில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு திரும்பப்பெறக்கோருவது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, நியாயமற்றதும்கூட. இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்பப்பெற அனுமதித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? இதேபோன்ற கோரிக்கையை அனைவரும் எழுப்புவர். இதேபோல முந்தைய ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை திரும்பப் பெறுவீர்களா என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், இந்த நடைமுறை சரியானது அல்ல என்றும், நாங்களும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.