ராமர் கோயிலிலும் கசிவு; வினாத்தாளும் கசிவு: உத்தவ் தாக்கரே

ராமர் கோயிலிலும் கசிவு ஏற்படுகிறது, வினாத்தாள் விவகாரத்திலும் கசிவு ஏற்பட்டுள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், சிவசேனை (உத்தவ் அணி) தலைவர் உத்தரவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆனால், இந்த அரசாங்கத்தை மக்கள் வழியனுப்ப தயாராகவுள்ளனர். நாளை நிதிநிலை அறிக்கை அரசால் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த அரசின் கடைசி அமர்வில் சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அறிவிப்புகள் மழைப்போல் பொழிந்தாலும், நடைமுறை வறட்சியாகவே உள்ளது.

இரட்டை எஞ்சின் அரசு என்று கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு கசிவு அரசாங்கம். ராமர் கோயிலிலும் கசிவு ஏற்படுகிறது, வினாத்தாள் விவகாரத்திலும் கசிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அமராவதி மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் சராசரியாக ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வுகளின் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், அயோத்தி ராமா் கோயில் கருவறையின் மேற்கூரையில் இருந்து அதிக அளவில் மழைநீா் கசிவதாக அக்கோயிலின் தலைமை அா்ச்சகா் ஆச்சாரிய சத்தியேந்திர தாஸ் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.