நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் நேரடி ஒளிபரப்பின்போது பிரதமர் மோடி 73 முறையும் ராகுல் 6 முறை மட்டுமே காட்டப்பட்டனர் என்று ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
18வது மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கியிருப்பதை முன்னிட்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது குறித்து தெரிவித்திருப்பதாவது, குடியரசுத் தலைவரின் 51 நிமிட உரையின்போது, யார் யார்? எத்தனை முறை காண்பிக்கப்பட்டனர்?
– அவையின் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி – 73 முறை
– அவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி – 6 முறை
– அரசு : 109 முறை
– எதிர்க்கட்சிகள் : 19 முறை
மக்களவை தொலைக்காட்சி, நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளைத்தான் ஒளிபரப்பத்தானே தவிர, கேமராஜீவி தனது விருப்பத்தை ஒளிபரப்ப அல்ல என்று ஜெய்ராம் ரமேஷ் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.
18வது மக்களவையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில், கடந்த 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனம் குறித்து பாஜகவின் நிலைப்பாடும் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது, உலக நாடுகள் பலரும், இந்தியா வீழும் என்றே நம்பினார்கள். இந்திய அரசமைப்பு கொண்டு வரப்பட் பிறகும், அதன் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
இன்று ஜூன் 27ஆம் தேதி, 1975ஆம் ஆண்டு ஜூன் 25ல், நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது அரசமைப்பு மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல், மிகப்பெரிய கருப்பு நாள். ஒட்டுமொத்த நாடும் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஆனால், சட்டத்துக்கு எதிரான சக்திகளிடமிருந்து மீண்டு தேசம் வெற்றிபெற்றது என்று கூறினார் முர்மு.