பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் ஒரு ட்வீட்டில் கிண்டலாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத்தொடர் முடிவடையும் வரை அதிமுக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று, அதிமுக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுகவின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணையை அதிமுக கோரி வரும் நிலையில், திமுக தரப்பு அதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது.
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் கிண்டலாக விமர்சித்துள்ளார். மணிப்பூர் கலவர பிரச்சனையையும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தையும் முடிச்சுப் போட்டு ஒரு புகைப்படம் மூலம் கிண்டல் செய்துள்ளார் ஜெயக்குமார். ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில்,
மோடி: கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே.. எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..?
ஸ்டாலின்: மணிப்பூருக்கே போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. எனினும், மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் தற்போது கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்லாததை விமர்சித்து ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.