நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது: தேவ கவுடா!

நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாகவும் முடியாது என முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்யசபாவில் பேசியதற்கு “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தியதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலுமே இன்று “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து பேசிய போது அவரது மைக் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. லோக்சபா முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு சபை கூடிய போதும் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. லோக்சபாவின் அடுத்த கூட்டம் ஜூலை1-ந் தேதி நடைபெறும்.

இதேபோல ராஜ்யசபாவிலும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் இதற்கு அனுமதி மறுத்தார். இதனால் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த களேபரங்களுக்கு நடுவே எழுந்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு முறையான, சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு யாரும் பொறுப்பாகவும் முடியாது. நாடாளுமன்றத்தை முறையாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார். தேவகவுடாவின் இந்த பேச்சுக்கும் எதிராகவும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ராஜ்யசபா நடவடிக்கைகள் முதலில் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் சபை கூடிய போதும் தொடர்ந்து அமளி நீடித்ததால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

லோக்சபா இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பிக்கள் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுந்து, அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக இந்த நாட்டின் மாணவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டும். இதனை முக்கியமான பிரச்சனையாக நாங்கள் கருதுகிறோம். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வு மோசடிகள் குறித்து இன்று சபையில் தனியே விவாதம் நடத்த வேண்டும் என்றார்.

ஆனால் ராகுல் காந்தியின் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராகுல் காந்தியின் மைக் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். பின்னர் பகல் 12 மணிக்கு சபை கூடிய போதும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். ராகுல் காந்தி பேசும் போது மைக் துண்டிக்கப்பட்டதையும் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து லோக்சபா சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார். ராஜ்யசபாவில் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் ஒருங்கிணைந்து, நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தியதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. நீட் தேர்வு மோசடிகளுக்கு யாரும் பொறுப்பாக முடியாது என முன்னாள் பிரதமர் தேவகவுடா ராஜ்யசபாவில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் முழக்கங்களை எழுப்பியதால் சபையில் அமளி நிலவியது. இதனையடுத்து ராஜ்யசபாவும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். பகல் 12 மணிக்கு ராஜ்யசபா மீண்டும் கூடிய போது, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. பாஜக எம்பி சுதன்சு திரிவேதி பேசிக் கொண்டிருந்த போதும் “இந்தியா” கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் சபையில் அமளி நீடித்தது. தேவகவுடாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள்.