நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இண்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காணொலி மூலமாக மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி கூறியதாவது:-
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் ஒரு பேரழிவு. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் பலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் கனவுகளும் இலக்குகளும் அழிக்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூன் 27) நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேசிய நான், நீட் பிரச்சினையை எழுப்பினேன். இன்றைய மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக ஒரு நாள் செலவிட வேண்டும் என்று (நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று) வலியுறுத்தி உள்ளேன். இணக்கமான முறையிலும், அமைதியான முறையிலும் இது குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளன.
7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. இதன் காரணமாக 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும், இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் நான் எழுப்பியபோது, பேச அனுமதிக்கவில்லை. வினாத்தாள் கசிவு என்பது திட்டமிட்ட முறையில் நடக்கக்கூடிய ஒன்று. இது ஒரு மிகப் பெரிய ஊழல். இந்த விவகாரம் இப்படியே தொடருவதை அனுமதிக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டாக வேண்டும்.
விவாதத்துக்கு தலைமை தாங்க வேண்டிய பிரதமர், விவாதத்தை விரும்பாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் விவாதத்துக்கு தயாராக உள்ளோம். நாங்கள் அரசாங்கத்துடன் சண்டையிட விரும்பவில்லை. எங்கள் கருத்துகளை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.