ஜார்க்கண்டில் பாஜக துடைத்தெறியப்படும்: ஹேமந்த் சோரன்!

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் தனது இல்லத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஹேமந்த் சோரன் கூறியதாவது:-

எனக்கு எதிராக பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதன் காரணமாகவே நான் சிறை செல்ல நேர்ந்தது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து காவிக் கட்சி துடைத்தெறியப்படும். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு எதிரான கிளர்ச்சி வெடிக்கும். ஜார்க்கண்ட் மக்கள் பாஜகவை விட்டுவைக்க மாட்டார்கள்.

பாஜகவின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் வந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் விரும்பும் எந்த நாளில் வேண்டுமானாலும் தேர்தலை நடத்தட்டும். நான் சவால் விடுகிறேன். வரும் நாட்களில் ஜார்க்கண்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும். பல மாநிலங்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர்களாக ஆக்கி இருப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால், அவர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கத் துறை அவரை ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய முன் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 13-ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். நேற்று (ஜூன் 28) காலை ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று மாலை அவர் பிர்சா முண்டா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலைக்கு வெளியே கூடி இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ஆண்டின் இறுதியில் ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.