சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (சனிக்கிழமை) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர். வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் ராஜ்குமார், மாரிச்சாமி, மோகன், செல்வக்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று (29-06-2024) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (வயது 40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 35) மற்றும் மோகன் (வயது 30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.