ஜேம்ஸ் வசந்தன் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

ஈரோட்டில் நடைபெற உள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை நிகழ்ச்சியில் தமிழ் இசையை கிறிஸ்தவமயமாக்க முயற்சி நடப்பதாகவும் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட ஜேம்ஸ் வசந்தன் தற்போது ’தமிழ் ஓசை -இயற்றமிழ் இசை தமிழில்’ என்ற பெயரில் சங்க கால தமிழ் பாடல்களுக்கு இசையமைத்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் அவர் இன்றும் நாளையும் ஈரோட்டில் தமிழ் ஓசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இந்த நிலையில் அவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் வெள்ளி விழா வரும் 29 சனிக்கிழமை 30 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் கொங்கு கலையரங்கில் மக்கள் சிந்தனை பேரவை அமைப்பாளர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் நடைபெறுகிறது. இவ்விழா நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவ மத பிரச்சாரகரும், திரைப்பட இசையமைப்பாளரும், சன், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த ஜேம்ஸ் வசந்தன் என்பவர் சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7.30 மணி வரை தமிழ் ஓசை எனும் பெயரில் நவீன இசையில் சங்கத்தமிழ் இசை பாடல்களை பாடுவதாக அறிவித்துள்ளார்கள்.

திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் பல கிறிஸ்தவ மத பிரச்சார பாடல்களுக்கு இசையமைத்ததோடு இசையமைப்பாளர் இளையராஜா குறித்து மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்தவர். இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் ரமண மகரிஷி அனுபவம் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்தவர். மேலும் நமது சங்கத் தமிழ் நூல்களையும் திருக்குறள் உள்ளிட்ட நூல்களையும் கிறிஸ்தவமயம் ஆக்குவதற்காக கிறிஸ்தவ மத போதகர்களுடன் இணைந்து திட்டமிட்டு இத்தகைய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தமிழை கிறிஸ்தவமயமாக்குவதற்கு தமிழ் இசையை கிறிஸ்தவமயமாக்குவதற்கு சங்கத்தமிழ் இலக்கியங்களை கிறிஸ்தவமயம் ஆக்குவதற்கு தொடர்ந்து திட்டமிட்டு மத அடிப்படைவாத கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வருகின்றவர் ஜேம்ஸ் வசந்தன் ஆவார். அவரை வைத்து இசை நிகழ்ச்சி நடத்துவது அவரது கிறிஸ்தவ மோசடி மதமாற்ற நடவடிக்கைகளுக்கு சதித்திட்டங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும்.

அது மட்டுமல்ல இசைஞானி இளையராஜா அவர்கள் குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து ஒட்டுமொத்த தமிழக மக்களை இழிவு படுத்தி வருகின்றவர் ஜேம்ஸ் வசந்தன் ஆவார். எனவே அவருடைய நிகழ்ச்சி நடத்துவதை இந்து மக்கள் கட்சி சார்பில் நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றோம். மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நாங்கள் நேரில் வந்து பங்கேற்று தமிழர்களின் சமய நம்பிக்கைகளை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு ஜேம்ஸ் வசந்தன் எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிப்போம். எங்களுடைய வழி அமைதியான முறையில் சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக வழியில் எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வோம்.

அதே போல மேற்கண்ட நிகழ்ச்சியில் தொடர்ந்து இந்து சமய சொற்பொழிவாளர் எனும் போர்வையில் செயல்படும் திரு சுகிசிவம் அவர்களும் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் இந்து தமிழர்களின் சமய நம்பிக்கைகள், கலை, இசை, இலக்கியம், வரலாறு, பண்பாடுகள் இழிவுபடுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திரு சுகி சிவம் அவர்களையும் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் நிகழ்ச்சியையும் கைவிட வேண்டுகிறோம். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இந்த நிகழ்ச்சியை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம். கோரிக்கை புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.