சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நாளை முடியவுள்ள நிலையில் அவருக்கு அடுத்த ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன்(நாளை) முடிவடைகிறது. இவர் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். துணைவேந்தர் ஜெகநாதன் தனியாக கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் அரசு அலுவலர்களை பயன்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகின.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை ஜெகநாதன் தொடங்கியதாக புகார் எழுந்தது. பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கி உள்ளார் துணைவேந்தர் ஜெகநாதன். அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் ஜெகநாதன் நண்பர்களுடன் இணைந்து பங்குதாரராக இருந்தார். இது உறுதி செய்யப்பட்டதால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளனர். ஊழல் புகாரில் சிக்கிய ஜெகநாதனை பணி நீட்டிப்பு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்த நிலையில் அவருக்கு பணி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து சட்டசபையிலும் கேட்கப்பட்டது. சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி , சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் . உயர்கல்வித்துறை சார்பில் நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. தமிழக அரசு இதில் கவனமாக செயல்பட்டு வருகிறது. ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதனுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார்.