டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டசபை கடந்த 22 ஆம் தேதி கூடியது. தொடர்ந்து காலை மாலை சட்டசபை நடந்து வந்தது. இன்று சட்டசபையில், காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு தறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதேபோல் கள்ளச்சாராயம் சம்பவம் போல் இனி ஒரு சம்பவம் அரங்கேற கூடாது என்பதற்காக மதுவிலக்கு சட்டம், 1937-ல் திருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை என்பதாலும், இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசியபோது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும், கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று கூறினார். இதுபற்றி துரைமுருகன் பேசியதாவது:-
கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள். உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசு மதுவில் கிக் இல்லை. அரசின் மதுபானம் சாப்ட் டிரிங்க் போல அவர்களுக்கு தெரிவதால் கள்ளச்சாராயம் நாடி செல்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.