புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அமைச்சர் அமித் ஷா விளக்கம்!

“பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூறியதாவது:-

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் சட்டங்களின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோடு மட்டுமில்லாமல், குற்றவியல் நீதி முறையை சுதந்திரமாக மாற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே உள்ளன.

சுதந்திரம் அடைந்து சுமார் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது குற்றவியல் நீதி அமைப்பு முற்றிலும் சுதந்திரமாக மாறியதற்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய சட்டங்கள் இனி இந்திய நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும். இன்று முதல் காலனித்துவ சட்டங்கள் அகற்றப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன.

தாமதத்துக்குப் பதிலாக, இனி விரைவான விசாரணை மற்றும் நீதி கிடைக்கும். முன்பு பழைய குற்றவியல் சட்டங்கள் மூலம் காவல் துறையின் உரிமைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டன. ஆனால், இப்போது ​​புதிய சட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார் கொடுப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களால் பலர் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது நாடாளுமன்றத்தில் போதிய விவாதம் இல்லாமல் புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமித் ஷா, “நாட்டின் வரலாற்றில் இந்தச் சட்டத்தை போல் வேறு எந்த சட்டமும் இவ்வளவு விரிவாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை” என்று கூறினார்.