தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியின நலத்துறை, தமிழக டி.ஜி.பி., சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், எஸ்.பி.க்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 18ஆம் அந்த பகுதியைச் சேர்ந்த பிரவீன், சுரேஷ், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் அங்கு கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு மேல் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் 65க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலருக்கு பார்வை பாதிப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
உடல் நலனுக்கு கேடு விளைக்கும் மெத்தனாலை தொழிற்சாலைகள் வாங்கி அவற்றை கள்ளச்சாராயத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டதும், அதனை வாங்கி குடித்தவர்கள் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதே போல கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றி இருக்கும் கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து வடமாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசாரும் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் மற்றும் அது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி அளித்த தொலைக்காட்சி நேர்காணல் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லாததால் அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறை, தமிழக டிஜிபி, சேலம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் எஸ்பிக்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.