அதிமுக தொண்டர்களை இணைக்கும் பணி விரைவில் தொடங்கும்: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக இணைப்பு தொடர்பாக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் என்றும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டு பல மாற்றங்களை சந்தித்து வந்தாலும், பாஜக உடனான கூட்டணியை தேர்தலுக்கு முன்னதாக முறித்தது மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். தென்சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, வேலூர், ராமநாதபுரம் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தொடர்ச்சியாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்பம் ஆகியோர், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் குரல் கொடுத்தனர்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டும், கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராகுவோம் என அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக தரப்போ சசிகலா, ஓபிஎஸ் பேச்சுகளை பொருட்படுத்தவே இல்லை. இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணைப்பு தொடர்பாக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் எனவும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.