பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள்: ஆ.ராசா!

“பொதுத் துறை நிறுவனங்களை 2 பேர் விற்கிறார்கள், அதனை 2 பேர் வாங்குகிறார்கள். அவர்கள் பெயர்களை நான் இங்கு சொல்ல மாட்டேன்” என ஆ.ராசா பேசியதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

18வது லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல் முறையாகக் கூடியது. லோக்சபா தேர்தலில் வென்ற எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று திமுக மக்களவை கொறடாவான எம்.பி ஆ ராசா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாசிச கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை மத்திய அரசு ஒடுக்கப் பார்க்கிறது. மத்திய பாஜக அரசு நினைப்பதை குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். பாஜக அரசின் அனைத்து செயல்பாடுகளும் சர்வாதிகாரம் கொண்டவை. பாசிச கொள்கை கொண்ட பாஜக எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை.

நான் பெரியார் திராவிட மண்ணிலிருந்து வந்துள்ளேன். 8 முறை தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கியுள்ளனர்.

ஒவ்வொருவரும் குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜக வலியுறுத்துகிறது. அவரவர் தந்தை செய்த வேலையையே செய்ய வேண்டும் எனப் பாஜக நினைக்கிறது. எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால், நான் இன்று ராகுலுடன் மக்களவையில் இருக்கிறேன். இதற்கு காரணம் தந்தை பெரியார்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களை விற்று வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டையும் மறைமுகமாக ஒழிக்கிறார்கள். இந்தியாவை 2 பேர் விற்கிறார்கள், அவர்கள் பெயர்களை நான் இங்கு சொல்ல மாட்டேன். அதனை 2 பேர் வாங்குகிறார்கள். இதுதான் மோடி அரசு” எனப் பேசினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பலரும் மேசையைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம், பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூச்சலிட்டனர்.

அதைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கும் பாஜகவில் பல வாரிசுகள், எம்.பி.க்கள், அமைச்சர்களாக உள்ளனர். அதானி குழும முறைகேடுகள் குறித்து 50 நாட்கள் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல பிரதமர் மோடிக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசுதான்” என்று ஆவேசமாகப் பேசினார்.