3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கறிஞர் அணி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது. ஜூலை 6 ல் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என்ற பெயரில் புதிய சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டங்கள் நாடு முழுவதும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக வழக்கறிஞர் அணி போராட்டம் நடத்த உள்ளது. அதன்படி, ஜூலை 5 ஆம் தேதி திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட நீதிமன்றங்களில் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 6 ல் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் கடந்த 29 ஆம் தேதியன்று திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும், இந்திய திருநாட்டினை காவல்துறை ஆதிக்க ஆட்சி நாடாக மாற்ற வழிகாட்டியாக இருக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் -1: வரும் ஜூலை 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் திமுக மாவட்ட கழகங்கள் ஒன்றிணைந்து, மாவட்ட நீதிமன்றங்களின் வாயில் முன்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்றிணைத்து “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தும் கண்டன முழக்கம் கேளா காதுகளாய் இருக்கும் மத்திய அரசை தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும்.
தீர்மானம் -2: திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ, எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில், வரும் 6ஆம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை குற்றவியல் சட்டங்களை எதிர்த்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணா விரதப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வழக்கறிஞர் சங்கங்கள் திரளாக பங்கேற்று உண்ணாவிரத பேராட்டத்தை வெற்றி அடைய செய்து, நம்முடைய கண்டன குரலை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானம் -3: மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கண்டன கருத்தரங்கங்கள் நடத்துவது. இந்த கருத்தரங்கத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வழக்கறிஞர்களும் பங்கு எடுத்துக் கொள்ள கூடிய வகையில் அரங்க கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் பொதுமக்களையும் பெருமளவில் கலந்து கொள்ள செய்வது என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.