சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி!

அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு எனவும், இந்தி திணிப்பு பல மொழிகள் – பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

150 ஆண்டுகளாக இந்தியாவின் நீதி மற்றும் காவல் துறையில் அமலில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி உள்ளிட்ட சட்டங்கள் நீக்கப்பட்டு புதிதாக 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் அமல்படுத்தப்படும் என பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்று முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததால் ஏற்கனவே நீதி மற்றும் காவல் துறையில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி உள்ளிட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியன் பீனல் கோட் எனப்படும் ஐபிசி இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதாவது சிஆர்பிசிக்கு பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவும், இந்திய ஆதாரச் சட்டம் அதாவது இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் 1872க்கு மாற்றாக பாரதிய சக்ஷா சன்ஹிதாவும் அமலுக்கு வந்துள்ளது.

அதே நேரத்தில் சட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை எனவும், ஆங்கிலத்தில் இருந்த பெயர்களை இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் மட்டுமே மாற்றியிருப்பதாக விமர்சங்கள் எழுந்துள்ளன. அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலேயே முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட, அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.

இந்தி திணிப்பாணது பல மொழிகள் – பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.