இந்தியா-இலங்கை அரசுகள் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 25 தமிழக மீனவர்களை அவர்கள் வைத்திருந்த 4 நாட்டு படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை செய்து வரும் செய்தி வேதனையளிக்கிறது. ஆண்டாண்டு காலமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்படும் சம்பவமும், துப்பாக்கிச்சூடு சம்பவமும் தொடர்ந்து நடந்தேறுகிறது. இதனால் மீனவர்களின் வேதனையும் தொடர்கிறதே தவிர, அவர்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் பிரச்சினை கிடப்பில் உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதால் ஏற்படுகின்ற பிரச்சினை என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மீனவர்கள் மீன்பிடிப்பதை இந்திய கடலோர காவல்படை தீவிரமாக கண்காணித்து எல்லை தாண்டாமல் மீனவர்களை தடுப்பது அவர்களின் கடமை.
மீன்பிடி காலங்களையும், பொதுவான எல்லைகளையும், நிபந்தனைகளையும் வரையறுத்து இரு நாடும் நல்லுறவை பேணும் வகையில் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துவிட்டால், மீனவர்கள் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக மீன்பிடித்து திரும்புவார்கள். அவர்களது குடும்பங்களும் மனநிறைவுடன் எதிர்காலத்தில் முன்னேற்றம் கண்டு வாழ்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே, இந்தியா-இலங்கை இரு நாட்டு அரசுகளும் மீனவர்களின் முழு வாழ்வாதார நலன் மற்றும், இரு நாட்டு நல்லுறவு மேம்பாடு கருதி உடனடியாக கலந்தாலோசித்து நிரந்தரத்தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.