விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள். 40 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதற்கு தகுதி பெறுவார்கள். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும் என அண்மையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு பணிகளில் 3% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டு ஆய்வு நடத்தியுள்ளார் அமைச்சர் உதயநிதி. மேலும், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.