எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு!

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த இடைக்கால முன் ஜாமீன் மனு தொடர்பாக நாளை (ஜூலை 4) உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 3 முறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த 25-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில், சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கின் விசாரணை கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் அளித்தார். இந்தப் புகாரானது வாங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சையின் போது அவருடன் இருக்க வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் ஜூலை 3ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், இம்மனு மீது இன்று வாதங்கள் நிறைவுற்ற நிலையில், மனு மீதான உத்தரவு நாளை (ஜூலை 4) பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.