சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டதாகவும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை ஹெல்த் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை, வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜாபர் சாதிக் தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தன் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டவிரோதமான கைதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை, திகார் சிறையில் உள்ள தன்னை அமலாக்க துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக வாரண்ட் பெற்றுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, நாளைக்கு தள்ளிவைத்துள்ளது.