ஹத்ராஸ் விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை: ராகுல் காந்தி!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக உரையை கேட்க பக்தர்கள் அதிக அளவில் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, இந்த விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

உ.பியின் பிரபல சாமியாராக வலம் வருபவர்தான் போலோ பாபா. இவர் ஜூலை 2ம் தேதி ஹத்ராஸ் நகரில் ஆன்மீக சொற்பொழிவை நடத்த திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக அறிவிப்பும் வெளியானது. இவரது உரையை கேட்க லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். ஆனால், இவ்வளவு பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இப்படி இருக்கையில் நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கிய பலர் திடீரென மயங்கி விழுந்தனர். ஆனால், அவர்களை மீட்காத சக பக்தர்கள் அவர்கள் மீது ஏறி நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் 30 பேர் வரை உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேரம் செல்ல செல்ல இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது வரை 121 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

நெரிசலில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உ.பி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் வசதி இல்லை என்றும், மருத்துவமனை வளாகத்தில் பக்தர்களின் உடல்கள் குப்பைகளை போல போடப்பட்டிருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். மறுபுறம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரமதர் மோடி உட்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த சம்பவத்தின் மீது அரசியல் செய்ய விரும்பவில்லை. இது ஒரு சோகமான சம்பவம், இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை அரசியலாக்க நான் விரும்பவில்லை. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்ததில் சில குளறுபடிகள் இருக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் விளிம்புநிலை மக்கள். அவர்கள் ஏழைகள், எனவே அவர்களுக்கான நிவாரண தொகையானது உயர்த்தி வழங்கப்பட வேண்டும். உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் இதை நான் வலியுறுத்த உள்ளேன். நிவாரண தொகை முடிந்த அளவுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி நடந்த பகுதியில் போதுமான அளவு காவல்துறையினர் குவிக்கப்படவில்லை என்று சொந்தங்களை இழந்த உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதையும் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.