முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுநிலைத் தேர்வு நடத்தப்படுகிறது.
முன்னதாக, ஜூன் 23ஆம் தேதி நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. இதனிடையே இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது, கருணை மதிப்பெண்கள் வழங்கியது என பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இதன்படி முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி 2 ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளது.