பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 8 பேர் சரணடைந்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஆம்ஸ்ட்ராங் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த காவல் துறையினர் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது தமிழ்நாடு, ஆந்திராவில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. எட்டு முறை குண்டர் சட்டதில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது நண்பர் மாதவனுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை மணலில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வெட்டி வீசப்பட்டார். இந்த சம்பவத்தில் ஆற்காடு சுரேஷ் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். உயிருக்கு போராடிய மாதவன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினார். அவரும் ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.
ஆற்காடு சுரேஷ் கொலை பின்னணியில் ஆர்ம்ஸ்ட்ராங் இருப்பதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு சந்தேகப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக தான் ஆர்ம்ஸ்டாரங் கொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. காவல் துறையினர் விசாரணையில் உண்மை நிலவரம் தெரிய வரும்.