“ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கையை வைக்கிறேன்,” என்று அக்கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலைப் பார்த்த பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் ரமாபாய் தலைமை அலுவலகத்தில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வதற்கு அனைவரும் விரும்புகின்றனர். நானும் விரும்புகிறேன். காங்கிரஸ் பேரியக்கமும் விரும்புகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை எப்படி அவரது தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்தார்களோ, அதேபோன்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலையும் அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கையை வைக்கிறேன். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம்ஸ்ட்ராங்கின் துணைவியாரிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அவரது சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும்படி கூறியிருக்கிறார். அவரை பேச வைக்க இருக்கிறோம்.
மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். இந்த கொலையில் உண்மையான குற்றவாளிகள், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எந்த அரசியல் கட்சியின் பின்புலம் இருந்தாலும் சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த வேண்டும். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. எனவே, அமைதியான முறையில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு காவல் துறையும், தமிழக அரசும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.