“அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர். இதன் மூலம் அவர்களது நன்மதிப்பையும் பெற்று வந்தார்.
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.