சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செம்மொழிப் பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற தலைப்பிலான பாரம்பரிய உணவு திருவிழாவை, கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவும், தற்சார்புடன் வாழ ஊக்குவிப்பதற்காகவும் ‘ஊரும் உணவும் திருவிழா’ சென்னை செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்று, திருவிழாவைத் தொடங்கி வைத்தார். இத்திருவிழா நாளையும் நடைபெறும். காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 55 புலம்பெயர்ந்த உணவுத் தொழில்முனைவோர், 100-க்கும் மேற்பட்ட அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரித்து வழங்குகின்றனர்.
இங்கு மொத்தம் 13 உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ‘ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை’ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த உணவுத் திருவிழாவை அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையம், தன்னார்வ தொண்டு நிறுவனமான ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம், அட்வென்டிஸ்ட் டெவலப்மென்ட் அண்ட் ரிலீஃப் ஏஜென்சி, ஜீசூட் ரெப்யூஜி சர்வீஸ், அட்வான்டேஜ் ஃபுட்ஸ்பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
தமிழக அரசின் இலங்கைத் தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு துணைத் தலைவர் கலாநிதி வீராசாமி, எழிலன் எம்எல்ஏ, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் இந்தியாவுக்கான துணைப் பிரதிநிதி மார்கிரிட், பொது மற்றும்மறுவாழ்வு செயலர் ரீட்டா ஹரிஷ்தக்கர், டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகநிர்வாக இயக்குநர் ஜே.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.