எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என்று தெரிந்து கொள்வதற்கு அண்ணாமலைக்கு 2 வருஷம் தேவைப்பட்டதா எனவும், அண்ணாமலைக்கு அனைத்து ரகசியமும் தெரியும் என்பதால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி விட வேண்டும் என்று புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து பேசியதே காரணம் என அப்போது அதிமுகவினர் விமர்சித்தார்கள். தேர்தல் முடிந்த பிறகு தற்போது அண்ணாமலை – எடப்பாடி இடையேயான வார்த்தை யுத்தம் அதிகரித்துள்ளது. அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் தன்னால் தான் பாஜக வளர்ந்துள்ளது என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள் குறித்து தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை கூறிய கருத்துக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு காட்டமாக பதில் அளித்திருந்தார் அண்ணாமலை. விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்தார். மேலும், நம்பிக்கை துரோகி என்ற பெயர் அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு எடப்பாடியும் அண்ணாமலை தலைவர் பதவிக்கு பொருத்தமற்றவர் என மிக காட்டமாக பதிலடி கொடுத்தார். எடப்பாடி- அண்ணாமலை நேரடியாக வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் புகழேந்தி கூறியதாவது:-
அண்ணாமலை நல்ல நண்பர். ஐபிஎஸ் படித்தவர். கர்நாடகாவில் நல்ல முறையில் பணியாற்றி வந்தவர். ஆனால் அவர் மீது ஒரு கோபம். அவரிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என்று அண்ணாமலை கூறினார். எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி என்று தெரிந்து கொள்வதற்கு 2 வருஷம் வேண்டுமா?. இதில் வெளிநாடு வேற படிக்க போகிறார் என்று சொல்கிறார். ஒன்னும் பண்ண வேண்டாம். பழனிசாமி எப்போ பிறந்தார், வளர்ந்தார்.. என அவருடைய வரலாற்றை படித்தால் போதும். அதிலேயே எல்லா அரசியலையும் கத்துக்கிடலாம்.
வேறு யாருக்கிட்டேயும் போக வேண்டாம். என்கிட்ட கேட்டீர்கள் என்றால் பக்கம் பக்கமாக சொல்வேன். ரொம்ப அமைதியாக இருப்பார். பேச மாட்டார். அன்பாகத்தான் இருப்பார். அம்மா இருக்கிற வரைக்கும் பயந்து தான் இருப்பார். இருந்தார். ஆனால் அதற்கு பிறகு இந்த வீரம், விவேகம், கத்துறது, தப்பு தப்பா தமிழ் பேசுறது என இது எல்லாம் எப்படி வந்ததுன்னு தெரியல. இது அண்ணாலைக்கு ரொம்ப நாளுக்கு பின்னாடி தான் தெரிஞ்சுருக்கு.
இது தெரியாம அண்ணாமலை எடப்பாடியை பெரிய மனிதனாக ஆக்கிட்டாரு. மோடி அருகில் கொண்டு உட்கார வைத்தார். அப்படி மோடியின் அருகில் இருக்கும் போது எப்படி முதுகில் குத்தவேண்டும் என்று அவர் முடிவு பண்ணிட்டார். அவருக்கு இது கை வந்த கலை. அண்ணாமலைக்கும் எடபப்பாடிக்கும் அடிதடி வரும் அளவுக்கு போய்க்கொண்டிருக்கிறது. எடப்பாடியை துரோகி என்று சொல்வதோடு நிறுத்திவிடாதீர்கள். இன்னும் பல சீக்ரெட் இருக்குன்னு உங்களுக்கு தெரியும். வெளியே எடுங்க. ஈடிய வர வைங்க.. ஐடிய வரவங்க. ஈடி, ஐடி எல்லாத்தையும் ஏவி விடுங்க. யார் யார் அயோக்கியத்தனம் செய்தார்களோ அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே போடுங்க. இவ்வாறு அவர் கூறினார்.