ஹாத்ரஸ் சம்பவம்: யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்!

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 6-ம் தேதியிடப்பட்ட அந்த கடிதத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகிர்ந்துள்ளார். அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்களை விளக்கியுள்ள ராகுல் காந்தி, இழப்பீட்டுத் தொகையை உயர்ந்தி விரைவாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஹாத்ரஸ் மற்றும் அலிகார் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்றதைப் பற்றிக் குறிப்பிடுள்ள எதிர்க்கட்சித் தலைவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தான் பேசும்போது அவர்கள் சந்தித்துள்ள இழப்புக்கு தற்போதைய இழப்பீட்டுத் தொகை போதுமானதகாக இருக்காது என்று தெரிவித்தனர்.

121 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஹாத்ரஸ் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடுகளை அறிய நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உதவும். அந்த சம்வபத்துக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தேவைப்படும் எந்த உதவிகளையும் செய்வதற்கு காங்கிரஸ் தொண்டர்களும் தயாராக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அந்தச் சம்பவம் குறித்தும் அவர்களுக்கு கிடைத்த உதவிகள் பற்றியும் கேட்டறிந்தார். இதுகுறித்து உரிய இடத்தில் பேசுவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிர்வாகத்தின் பக்கம் எங்கோ குறைபாடு உள்ளது. அதுவே இவ்வளவு பெரிய சோகத்துக்கு வழிவகுத்துள்ளது. 80,000 பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் இவ்வளவு பேர் எப்படி அங்கு கூடினார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.