ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த படுகொலை என்பது தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டு அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பெரம்பூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னைக்கு நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உள்பட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதுதொடர்பாக மாயாவதி பேசியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் அம்பேத்கர் கொள்கையுடன் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது. அவரது படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்து தொண்டர்கள் செயல்பட கூடாது. அமைதியான முறையில் கருத்துகளை கூறுங்கள். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு எங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும்.
ஆம்ஸ்ட்ராங் எப்படி கட்சியின் செயல்பாடுகளை முன்னெடுத்து செய்து வந்தாரோ அதேபோல் பிற நண்பர்கள் தலித் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறி கொள்கிறேன். தலித் மக்களின் வழக்கு விவகாரங்களுக்கு உதவி செய்தார். பொருளாதார ரீதியாகவும் துணை நின்றார். இந்த வேளையில் ஊடகங்கள் வாயிலாக தமிழக அரசுக்கு ஒன்றை கூறி கொள்கிறேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.