விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி பரப்புரை!

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக செயல்படுத்திய திட்டங்களை லிஸ்ட் போட்டார்.

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இருந்த நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனையடுத்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டிக்கு தொகுதிக்கு வரும் 10ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது எனக் கூறி புறக்கணித்துள்ளது. பரப்புரை இன்றுடன் நிறைவு பெற உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது உதயநிதி பேசியதாவது:-

ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் மாதிரி பள்ளிகள், மாணவர் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டும். விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். கொசப்பாளையம், ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். வாதானூர் வாய்க்காலை தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் சரி செய்யப்படும். புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். ரூ.62 கோடி மதிப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலை அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

மக்களின் மகிழ்ச்சியும் எழுச்சியும் திமுகவின் வெற்றியைக் காட்டுகிறது. கடந்த மூன்று வருடங்களில் முதல்வர் ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், ஆவின் பால் விலைகளை குறைத்தார். 1.16 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பயன்பெற்றுள்ளனர். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன். வரும் இடைத்தேர்தலில் அன்னியூர் சிவாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.