ஆம்ஸ்ட்ராங் படுகொலை: தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு தமிழக அரசு, தமிழக டிஜிபிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவருக்கு வயது 52 ஆகிறது. இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இவர், அடிதட்டு மக்களை படிக்க வைத்து வழக்கறிஞர்களாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ரூ 20 லட்சம் மதிப்பிலான துப்பாக்கியை உடன் வைத்திருந்தார். வெளியே எங்குச் சென்றாலும் ஆதரவாளர்கள் புடைச் சூழ, துப்பாக்கியுடன்தான் செல்வாராம். ஆனால் வீட்டருக்கே செல்லும் போது மட்டும் துப்பாக்கியை கொண்டு செல்ல மாட்டார் என்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி மாலை இவர் அதே தெருவில் கட்டி வரும் புதிய வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட சென்றார். அப்போது அங்கு உணவு டெலிவரி ஊழியர்கள் போல் வந்த இருவர், ஆம்ஸ்ட்ராங்கிடம் “உங்களுக்கு உணவு வந்ததாக” கூறியுள்ளனர். அதற்கு அவர் நான் எதுவும் ஆர்டர் செய்யவில்லை, நீங்கள் தவறான முகவரிக்கு வந்துவிட்டீர்கள் என கூறியுள்ளார். ஆனால் அந்த இருவரும் விடாமல் இல்லை உங்கள் பெயர், இந்த வீட்டு முகவரிதான் போட்டிருக்கிறது என்றனர்.

இவர்கள் சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் இப்படி பேசுவதை அடுத்து சுதாரித்த போது அவரது கவனத்தை திசைதிருப்பி கை, கால்கள், தலையை வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவருடைய உறவினருக்கு சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெரம்பூர் எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நிறைந்த பகுதி. அந்த பகுதியில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு செல்வாக்கு அதிகம். அப்படிப்பட்ட நிலையில் இந்த கொலை நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என விமர்சித்தார்.

இந்த நிலையில் இந்த கொலை தேசிய அளவில் பேச்சுபொருளானது. இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் சிங் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டார். விரைவில் கொலையாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என கோரிக்கைகள் எழும் நிலையில் தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் படுகொலை என்பதால் விரைந்து விளக்கம் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.