ஆம்ஸ்ட்ராங் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்கு நேரில் சென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது குடும்பத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் அவரது உருவப் படத்துக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அன்புமணி கூறியதாவது:-

ஆம்ஸ்ட்ராங் இழப்பில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட இழப்பு. தமிழ் சமுதாயம், தமிழகத்தில் உள்ள சமூகநீதி இயக்கத்துக்கு பின்னடைவாக பார்க்கிறேன். அடக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும், இவர்களுக்கு சமூகநீதி வரவேண்டும் என்றால் ஆட்சிக்கு வர வேண்டும் என்று 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். சமீபத்தில் நாங்கள் இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்கூட ராமதாஸின் சிந்தனைகள், சமூக நீதி பற்றி தெளிவாக பேசியுள்ளார். பல்வேறு இடங்களில் அவரது கருத்துகளையும் முன்வைத்துள்ளார்.

இந்த கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக காவல்துறையினர் மீது மரியாதை இருந்தது. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு நம்பிக்கை இழந்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.