விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!

விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட சாராயத்தை குடித்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜூலை 10) காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டி.கொசபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

வாக்குப்பதிவையொட்டி அந்தப் பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட சாராயத்தை முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்கள் குடித்துள்ளனர். சாராயத்தை குடித்த 7 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக தற்போது விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்குப்பதிவு நாளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சாராயம் கடத்தி வரப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.