பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்பட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய எஸ்சி, மனித உரிமை ஆணையங்களை தமிழக பாஜக குழுவினர் வலியுறுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் வி.பி.துரைசாமி தலைமையிலான குழுவினர் தேசிய பட்டியலின ஆணையம், மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட புதுடெல்லிக்கு சென்றனர். உடன் மாநில பொதுச் செயலாளர்கள் பொன்.பாலகணபதி, கார்த்தியாயினி, முன்னாள் எம்.பி.குழந்தைவேலு உள்ளிட்டோரும் சென்று மனு அளித்தனர். அம்மனுவில், கடந்த 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்திலும் பாஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.