காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்துள்ளது: பூவை ஜெகன் மூர்த்தி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளார். காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டுக்கு அருகே மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவம் அவரது தொண்டர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் தொடர்பாகப் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் இப்போது வரை இந்தக் கொலை தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான பூவை ஜெகன் மூர்த்தி இந்தப் படுகொலை தொடர்பாக சில விஷயங்களைப் பேசியுள்ளார். ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் பூவை ஜெகன் மூர்த்தி கூறியுள்ளதாவது:-

இந்தக் கொலை சம்பவம் நடந்த போது நான் திருவள்ளூரில்தான் இருந்தேன். செய்தி காதுக்கு வந்த உடனேயே நான் நம்பவே இல்லை. அவரைக் கொலை செய்திருக்கவே முடியாது. பெயரைத் தவறுதலாக மாற்றிச் சொல்கிறார்கள் என்றே நம்பினேன். அதன்பிறகு செய்தியில் போட்டார்கள். அப்போதுதான் பதற்றமே அதிகமானது. உடனே ஜிஹெச்க்கு வந்தோம். அந்தளவுக்கு மனம் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் தவித்தோம். நண்பர் ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது முன்கூட்டியே காவல்துறைக்கோ அல்லது உளவுத்துறைக்கோ கட்டாயம் தெரிந்திருக்கும். இந்தக் கொலை நடந்த பிறகு பலரும் எழுப்பும் கேள்வி இதுதான். அப்படி இருக்கும்போது காவல்துறை ஆம்ஸ்ட்ராங்கை எச்சரித்திருக்கலாம். உஷார் படுத்தி இருக்கலாம். அதை காவல்துறை செய்யத் தவறிவிட்டது என்றே தெரிகிறது.

இந்தக் கொலையில் இப்போது சரண்டர் ஆகியிருக்கும் யாரும் உண்மையான கொலைகாரர்கள் இல்லை. அவர்களை யாரோ ஏவிவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தக் கூலிப்படையை ஏவி விட்டவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது வெளிச்சத்திற்கு வரவேண்டும். இந்தக் கோரிக்கையை நான் மட்டும் வைக்கவில்லை. பிஎஸ்பி கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியே கூறியுள்ளார். பலரும் கேட்டிருக்கிறார்கள். நானும் சொல்கிறேன் பெரம்பூர் காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது. காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கிடம் ஒரு கன் இருந்தது உண்மை. அவர் அதை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருப்பார். கைக்கு அடக்கமான சின்ன கன் தான் அது. ஒருவேளை கையில் இல்லை என்றால், அவரது காரில் வைத்திருப்பார். அப்படி இருக்கும்போது அவர் கையில் கன் இல்லை என்பதை எப்படி கொலை செய்ய வந்தவர்களுக்குத் தெரியும்? அவரைக் கொலை செய்ய வந்த கூலிப்படை, உணவு டெலிவரி செய்யும் உடையை அணிந்திருந்தார்கள். கையில் அவர்கள் பார்சலுடன் வருவதைப் பார்த்துவிட்டு, ஆம்ஸ்ட்ராங் உட்பட அவரது நண்பர்கள் அலட்சியமாக நின்றுள்ளார்கள். அவருடன் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த வாக்குமூலமும் அதையேதான் சொல்கிறது. முற்றிலும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடந்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் எங்கள் தலைவர் பூவை மூர்த்தியுடன் ஒரு சகோதரனைப் போல கூடவே பயணித்தவர். அவரை அந்தப் பகுதி மக்கள் அந்தளவுக்கு நேசித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் மூர்த்தியை பார்த்துத்தான் அவர் அரசியலுக்கே வந்தார். ஆம்ஸ்ட்ராங் ரோல் மாடல் மூர்த்திதான். தன் சமூக மக்களுக்காக அவர் பல ஆண்டுகள் திருமணமே செய்து கொள்ளவில்லை. சில ஆண்டுகள் முன்பாகத்தான் கல்யாணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு ஒன்றரை வயது மகள் உள்ளார். அந்தக் குழந்தை தனது அப்பாவை இழந்திருக்கிறது.

அவரது உடலை பெரம்பூரிலேயே அடக்கம் பண்ண வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசு அதற்கு அனுமதி தரவில்லை. அதன்பிறகு எங்கு அடக்கம் செய்வது என்பது தெரியாமல்தான் இருந்தார்கள். அப்போதுதான் ரெட்ஹில்ஸ் பக்கத்தில் பொத்தூர் பக்கத்தில் அவருக்குச் சொந்த நிலம் இருப்பதாக தெரிந்தது. ஆகவே அங்கேயே அடக்கம் செய்தோம். அந்த இடமும் இல்லை என்று தெரிந்திருந்தால், உடனே நான் அண்ணன் மூர்த்தி பக்கத்திலேயே அடக்கம் செய்ய இடம் கொடுத்திருப்பேன். எங்கள் பகுதியில் ஆம்ஸ்ட்ராங்கை அடக்கம் செய்திருந்தால், நாங்கள் எங்கள் தலைவரின் பிறந்தநாள், மறைவு நாட்களில் மரியாதை செய்வதைப் போல இவருக்கும் வருங்காலத்தில் ஒன்றாகச் சேர்த்துச் செய்து வந்திருப்போம். சொந்த நிலம் உள்ளது எனச் சொன்னதால், அந்தக் கோரிக்கையை நான் வைக்கவில்லை. அவரது அலுவலகத்தில் இடவசதி குறைவு. கூடவே அது மக்கள் குடியிருக்கும் பகுதி. ஆகவே அங்கே அடக்கம் செய்ய அனுமதி இல்லை என்று அரசு சொன்னது. எனவேதான் நாங்கள் நீதிமன்றம் போனோம். நீதிமன்றமும் அதையே சொன்ன பிறகு எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.