நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கமிஷனர் ஆபிசில் புகார்!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், பாடல் பாடியதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முன்னதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக கட்சியின் பேச்சாளரும் யூடியூபருமான சாட்டை துரைமுருகன் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது சாட்டை துரைமுருகன் பேச்சு திமுகவினரை பெரும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது. பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய சாட்டை துரைமுருகன் திமுக தலைவர்களையும் அக்கட்சி எம்பி எம்.எல்.ஏக்களையும் கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து மிகவும் அவதூறாக பேசினார். மேலும் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றையும் சாட்டை துரைமுருகன் பாடி காட்டினார். இதை அடுத்து திமுக ஐடி விங் பிரிவு நிர்வாகிகள் இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சாட்டை துரைமுருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்த துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது சாட்டை துரைமுருகனை சிறையில் அடைக்க தேவையில்லை என கூறி நீதிபதி விடுவித்தார். முன்னதாக சாட்டை துரைமுருகனின் கைது சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”புள்ளபூச்சி என்பதால் கைது செய்து விட்டார்கள்.. புலியையோ சிங்கத்தையோ கைது செய்ய முடியுமா? நான் அந்த பாடலை பாடுகிறேன்.. முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.. தொட்டுப் பார்க்கட்டும்” எனக் கூறி அந்த பாடலை பாடி காட்டினார். இதை அடுத்து அந்த பாடல் ஆனது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான நடராஜன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.