விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. சுயமரியாதையும், கௌரவமான வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
வேட்பாளர் அன்புமணியை எங்களுக்கு தந்த நிறுவனர் ராமதாஸ்க்கும், எங்களுக்காக பிரசாரம் செய்த அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், குறிப்பாக நண்பர் அண்ணாமலைக்கும், முன்னால் முதல்வர் ஓபிஎஸ்க்கும், டிடிவி தினகரனுக்கும், ஜி.கே வாசன், பாரிவேந்தர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விக்கிரவாண்டி தொகுதியில் நேர்மையான முறையில் பாமக வாக்குகள் பெற்றுள்ளது. ரூ. 250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளது. மொத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குவிந்து 3 தவணையாக பணம் கொடுத்தனர். அரிசி, பருப்பு, பணம் மூக்குதி என பலவற்றை கொடுத்தார்கள். தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? அவர்களுக்கு எதற்கு சம்பளம்? பணம் பொருள் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவில்லை. திமுக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். தேர்தல் ஆணைய தலைவர் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல.
மக்களை குறை கூறமாட்டேன். அவர்களுக்கு 500 ரூபாய் பெரிய பணம். தனிநபர் வருமானத்தில் கடைசியில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான். பணம், பொருள் என ஒரு ஓட்டுக்கு ரூ. 10 ஆயிரம் திமுக செலவு செய்துள்ளது. மக்களை இப்படி வைத்திருந்தால்தான் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியும் என நினைக்கிறார்கள். விக்கிரவாண்டியில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. சுயமரியாதையும், கௌரவமான வாக்குகளை நாங்கள் பெற்றுள்ளோம்.
ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவினர் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். திமுகவை ஜென்ம விரோதியாக அதிமுகவினர் கருதினர். ஆனால் தற்போது அதிமுகவிர் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். இடைத்தேர்தலில் முடிவு பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.