டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்புக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “பென்சில்வேனியாவில் டொனால்ட் டிரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட நான், நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்த தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும்போது, அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும், பேரணியில் இருந்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்.
அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக நானும், ஜில் பைடனும் ரகசிய சேவைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை. அதைக் கண்டிக்க ஒரே தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும்” என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமலா ஹாரிஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் டிரம்ப்க்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்பதை அறிந்து நானும் எனது கணவர் டக்கும் நிம்மதியடைந்தோம். அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், இந்த அர்த்தமற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ரகசிய சேவை, உடனடியாக பதிலளித்தவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உடனடி நடவடிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இது போன்ற வன்முறைகளுக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும், இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நமது பங்களிப்பைச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பராக் ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில், “நமது ஜனநாயகத்தில் அரசியல் வன்முறைக்கு முற்றிலும் இடமில்லை. என்ன நடந்தது என்று எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், முன்னாள் அதிபர் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பதில் நாம் அனைவரும் நிம்மதியடையலாம், மேலும் நமது அரசியலில் நாகரீகம் மற்றும் மரியாதைக்கு நம்மை மீண்டும் ஒப்புக்கொள்ள இந்த தருணத்தைப் பயன்படுத்த வேண்டும். டிரம்ப் விரைவில் குணமடைய நானும் மிட்செல்லும் வாழ்த்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அமெரிக்காவின் 45வது அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். வன்முறை ஒருபோதும் அரசியலின் அங்கமாக இருக்க முடியாது” என்று அதில் இஸ்ரேல் காட்ஸ் பதிவிட்டுள்ளார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இன்றைய துப்பாக்கிச் சூடு மற்றும் உயிரிழப்புகளால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அரசியல் வன்முறைகள் சகிக்க முடியாதவை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்று அதில் சுந்தர் பிச்சை பதிவிட்டுள்ளார்.

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் இது தொடர்பாக கூறுகையில், டொனால்டு டிரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அவர் உடனடியாக உடல் நலம் தேற வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறையின் தலைவரும், இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டவரும் ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.