சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டிகே சிவகுமார் மனு தள்ளுபடி!

கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தாக்கல் செய்த தம் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. இதனால் கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய காங்கிரஸ் முகங்களில் ஒருவர்தான் டிகே சிவகுமார். கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர். கர்நாடகா முதல்வர் பதவி கிடைக்காத போதும் இப்போதும் அதற்காக காய் நகர்த்தி வருகிறார் துணை முதல்வர் டிகே சிவகுமார். டிகே சிவகுமார் மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கர்நாடகா அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் டிகே சிவகுமார் என்பது வழக்கு.

தம் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவகுமார் மேல்முறையீடு செய்தார். அதேநேரத்தில் சிவகுமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க சிபிஐக்கு தந்த அனுமதியை கர்நாடகா அரசு ரத்து செய்தது. கர்நாடகா அரசின் லோக் ஆயுக்தா இந்த வழக்கை நடத்தி வருகிறது. டிகே சிவகுமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது டிகே சிவகுமார் தரப்புக்கு சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அத்துடன் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி டிகே சிவகுமாரின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர்.