பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள இளநிலை நீட் தேர்வு தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் இளநிலை நீட் தேர்வில் நடந்துள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட மாணவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் இதற்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் ஜூலை 18-ம் தேதி விசாரிக்க உள்ளது. மறு தேர்வு நடத்த உத்தரவிடலாமா வேண்டாமா என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள முக்கிய கேள்வியாக இருக்கிறது. இளநிலை நீட் தேர்வு எழுதியவர்களில், தவறு செய்பவர்களை, அப்பாவி மாணவர்களிடமிருந்து பிரிக்க முடியுமா என்பதை ஆராய்வதே தங்கள் முதல் முன்னுரிமை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மே 5-ம் தேதி நீட் தேர்வெழுதிய 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.