யூ டியூபர் சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாததுதான்.. அதேநேரத்தில் அவருக்கு இடைக்கால பாதுகாப்பு ஏன் வழங்கக் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கு எதிராக அவரது தாயார் தொடர்ந்த மனு மீது தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வரும் 18-ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
யூ டியூபரான சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் தமிழக பெண் போலீசார் பற்றி இழிவாக விமர்சித்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதனால் சவுக்கு சங்கரை தமிழக போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் கோவை உள்ளிட்ட பல மாவட்ட காவல் நிலையங்களில் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பாய்ந்தது. இதனால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தினர். அதாவது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி பாலாஜியோ, அரசு பதிலளிக்க அவகாசம் வழங்க உத்தரவிட்டார். இதனால் மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த விசாரணையின் போது, ஆட்கொணர்வு மனுக்களை மீண்டும் 2 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனு மீது சில நாட்களுக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி எம்.சுந்தரேஷ் இந்த விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, தடுப்பு காவலில் ஒருவரை வைப்பது மிக தீவிரமான விஷயம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலா சவுக்கு சங்கர் செயல்பட்டார்? என தமிழ்நாடு அரசு தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் சவுக்கு சங்கரின் செயல் மன்னிக்க முடியாததுதான். இருப்பினும் அவருக்கும் இடைக்கால பாதுகாப்பு ஏன் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அத்துடன் சவுக்கு சங்கரின் தாயார் மனு மீது தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு விசாரணை வரும் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.